×

12 மணி உணவு 4 மணிக்கு தரும் அவலம் கொரோனா நோயாளிகள் கடும் குற்றச்சாட்டு: மாத்திரை விழுங்க குடிநீர் இல்லை

*  பாத்ரூம் தண்ணீரை குடிக்கும் அவலம்

சென்னை: கொரோனா வார்டுகளில் குடிக்க தண்ணீரும், உரிய நேரத்தில் சாப்பாடும் தருவதில்லை என்று அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள நோயாளிகளின் பகீர் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். சென்னையில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கொரோனா தொற்று பரவிக் கொண்டிருக்கிறது. எனவே, பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைத்துள்ளது.  அங்கு முதலில் அட்மிட் செய்யப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் உட்பட சாப்பாட்டு மெனுவை தமிழக அரசால் வெளியிட்டது.
ஆரம்பத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. வேகமாக குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர்.

ஆனால் தற்போது ஒவ்வொரு நாளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதில் இருந்து அந்த வார்டுகளில் நோயாளிகள் சரியாக கவனிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை 4 அரசு மருத்துவமனைகளில் மட்டும் 1,700 படுக்கைகள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் தற்போது 1190 பேர் உள்ளனர். இதனால் 500 கொரோனா படுக்கைகள் மட்டும் மீதமுள்ளது. எனவே சென்னையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க கல்லூரிகள், பள்ளிகள், திருமண மண்டபங்கள் தயார் செய்யப்படுகிறது.

 தற்போது நந்தம்பாக்கம் வர்த்தக மையத்திலும் பாதிப்புக்குள்ளானவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் இங்கு தனிமை வார்டுகள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும், நோயாளிகளுக்கான எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகும் தகவல் வெளியாகி வருவது அனைத்து தரப்பினரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டவர்கள் செல்போன் மூலம் தெரிவித்த தகவல் தமிழக சுகாதாரத்துறைக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட நபர்கள் சிலர் செல்போன் மூலம் தெரிவித்த தகவல் வருமாறு: கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம்.

இங்கு தரும் சாப்பாடு மிக மோசமாக உள்ளது. பலர் இந்த சாப்பாட்டை அப்படியே குப்பையில் தான் கொட்டுகின்றனர். ஒரு நபருக்கு சின்ன பாட்டிலில் அரை லிட்டர் தண்ணீர் தருகின்றனர். இப்போதைய வெயிலுக்கு அது போதாது. மருத்துவமனை நிர்வாகம் 3 மாடிக்கு ஒரு வாட்டர் கேனை மட்டுமே வைத்திருக்கின்றனர். வயதானவர்கள் 3 மாடி ஏறி தண்ணீர் பிடிக்க முடியாது. மேலும் நிறைய நோயாளிகள் இருப்பதால் அது உடனடியாக காலியாகிறது. மீண்டும் வாட்டர் கேன் வைக்க மறுக்கின்றனர். அவர்கள் தரும் மாத்திரைகளை விழுங்க கூட தண்ணீர் இல்லை. சிலர் தாகத்தை அடக்க முடியாமல் பாத்ரூமில் தண்ணீர் பிடித்து குடிக்கின்றனர்.

காலையில் 10.30 மணிக்கு டிபன் தருகின்றனர். மதியம் சாப்பாடு இன்று எனக்கு நான்கே கால் மணிக்கு தான் வந்தது. வயிறு பசியை கூட பொறுத்து கொள்ளலாம். ஆனால் தாகத்தை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் கூட எனது அருகில் தான் இருக்கின்றனர். அவர்களுக்கும் இதே நிலை தான்.  இவ்வாறு அவர் கூறினார்.  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயரும் நிலையில் ஊரடங்கில் தமிழக அரசு பெரிய அளவில் தளர்வை ஏற்படுத்தியுள்ளதே கேள்வி குறியாக உள்ள நிலையில், கொரோனா வார்டுகளில் தாகத்துக்கு தண்ணீர் கூட வழங்காமல் அலட்சியம் காட்டும் போக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

Tags : Coronation Patients Severe ,There Is No Drinking Water To Swallow The Pill Coronation Patients , Corona, no food, no corona patients, no pill, no drinking water
× RELATED தொழில் நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ...